அடுத்து கார்த்தி, இயக்குநர் முத்தையா இயக்க உள்ள புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழ் திரையுலகில் முன்ணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வம் படத்தில் நடித்து வருகிறார். இதில் வந்தியத் தேவனாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொன்னியின் செல்வன் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்த கையோடு கார்த்தி, இயக்குநர் முத்தையா இயக்க உள்ள புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முத்தையா இயக்கிய குட்டிப்புலி, மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, கொடி வீரன் ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. ஆனால் முத்தையாவின் இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அடுத்தடுத்த தோல்வி காரணமாக தன்னுடைய ஹிட் பட ஹீரோவுடன் முத்தையா மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

முத்தையா, கார்த்தி இணையும் படத்தை கொம்பனை தயாரித்த ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகே கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ள சர்தார் படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்க நடிகை அபர்ணா முரளியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூரரைப் போற்று படத்தில் நடித்த அபர்ணா முரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.