திரையுலகைப் பொறுத்தவரை தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்களின் குடும்பங்கள் கூடதப்பவில்லை. ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஆராத்யா என ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொற்று பாடாய் படுத்திவிட்டது. ஆக்‌ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவரது தந்தை என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.இன்றுடன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள அபிஷேக் பச்சன், மருத்துவமனையில் இருந்து நல்லபடியாக வீடு திரும்பியுள்ளார்.

அதே நேரத்தில் பிரபல பாடகாரன எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த வாரம் இயக்குநர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை அவரே டுவிட்டரில் தெரிவித்தார். அந்த பதிவில்,  எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்தது. எனவே கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. எனவே மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். எங்கள் யாருக்குமே கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாகவும், மருத்துவர்கள் காட்டிய வழிமுறைகளையும் பின்பற்றிவருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட மற்றும் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ஏற்பட்ட நிலை ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது ராஜமெளலி  “ஆர் ஆர் ஆர்” என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் காணப்பட்டதால் தனய்யா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். சமீபத்தில் இவருக்கு இதயக்கோளாறு காரணமாக ஸ்டெண்ட் வைத்துள்ள நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களையும், டோலிவுட் பிரபலங்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.