தொடர்ந்து, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படம், சூப்பர் ஹிட்டாக வடிவேலுவின் சினிமா கிராஃப்பும் உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், அவர் ஹீரோவாக நடித்த எந்த படங்களும் சரியாக ஓடாததால், மீண்டும் தனது ட்ரேட் மார்க்கான காமெடிக்கு திரும்பினார். 

அவர் காமெடியனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் விஜய்யின் 'மெர்சல்'. இதனையடுத்து, மீண்டும் இம்சை அரசனை இயக்கிய சிம்புதேவனுடன் கைகோர்த்த வடிவேலு, 'இம்சை அரசன்-24ம் புலிகேசி' படம் மூலம் ஹீரோவாக கம்பேக் கொடுக்க ரெடியானார். இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். 

மிக பிரம்மாண்ட செட்டுகள் அமைத்து படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில், வடிவேலுவுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பிலிருந்து வடிவேலு பாதியில் வெளியேற, இந்த விவகாரம் தயாரிப்பு சங்கம் வரை சென்று அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. 


காமெடியால் உச்சம் தொட்ட வடிவேலுவின் திரைப்பயணம், ஹீரோ என்கிற மமதையால் இறக்கம் கண்டது. அதன் பின்னர், படவாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வடிவேலு, தடைகள், பிரச்னைகள் அனைத்தும் நீங்கி விரைவில் படங்களில் நடிப்பேன் என சமீபத்தில் கூறியிருந்தார்.


இந்நிலையில்தான், தல அஜித்துடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'வலிமை' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங், விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது, படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வில் படக்குழு தீவிரமாக உள்ளதாம். இந்த வேளையில், 'வலிமை' படத்தில், அஜித்துடன் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் வெளிவந்த 'ராஜா' படத்தில்தான் கடைசியாக அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்தனர். 

இந்த படப்பிடிப்பின்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அஜித்தும், வடிவேலுவும் பிரிந்தனர். அதன்பின்னர், எந்தவொரு படத்திலும் இணையாத அஜித் - வடிவேலு கூட்டணி, தற்போது வலிமை படத்தில் இணையவுள்ளதாக இணையத்தில் பரவும் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.