பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நடிகர் கமல் திமுகவுடன் சேர்ந்துகொண்டு அவதூறு பரப்புவது தேர்தல் காலத்து நரித்தனமே என்று அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடான ’நமது அம்மா’ கடுமையாக விமர்சித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பயங்கர சம்பவம் தொடர்பாக நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு காணொளி மூலமாக அறிக்கை வெளியிட்டிருந்த கமல், '’உங்க அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பாக்கெட்டுக்குள் வைத்திருந்தால் மட்டும் போதுமா? இந்தக் கேள்விகளை எல்லாம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகக் கேட்கவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பன் என்கிற முறையில் கேட்கிறேன், உங்க ‘அம்மாவுக்கே’ ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க மிஸ்டர் சி.எம்? இதுவரைக்கும் எதுவுமே செய்யாம எதுக்காகக் காத்திருக்கீங்க. எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்திருக்கீங்களா? என்று விளாசித்தள்ளியிருந்தார் கமல்.

கமலின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா’வில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், ‘பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதிவாரி தூற்றுகிறாரே உளறல் நாயகன். அ.தி.மு.க அரசின் மீது வன்மம் கொண்டு, உள்நோக்கம் கற்பிக்க கமல் ஹாசன் போன்றோர் வெறிபிடித்து அலைகின்றனர்.

குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவதூறு பரப்புவது தேர்தல் காலத்து நரித்தனமே. ஆளும் அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என்று அடுக்காத குற்றச்சாட்டுகளை வீசும் திமுகவுடன், கமல்ஹாசனும் கைகோர்க்கிறார். சான்றோருக்கு இரங்கல் என ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர் தான் இந்த உத்தம வில்லன்’என்று விமர்சனம் செய்துள்ளனர்.