ரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கலங்கடிக்கும் துருவ் விக்ரம்... 'ஆதித்ய வர்மா' படம் நவம்பர் 21ம் தேதிதான் ரிலீஸ்... ஆனால் இங்கில்லை!
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் படம் எதுவென்றால்? அது, 'சியான்' விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' படம்தான்.
தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதில், துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்தும், முக்கிய கேரக்டரில் பிரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.
'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா, ஆதித்ய வர்மா மூலம் இயக்குநராக ப்ரமோஷன் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, 'அர்ஜூன் ரெட்டி' புகழ் ரதான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே, 'ஆதித்ய வர்மா' படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, படத்தின் டீசர், இதுவரை 15 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அர்ஜுன் ரெட்டியின் ரீமேக், சியான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் படம் என எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், முதலில் கடந்த நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்றார்போல், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக பங்கேற்றனர்.
ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஆதித்ய வர்மா படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட காலதாமதம்தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. பின்னர், படத்திற்கு தணிக்கை துறையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்க, வரும் நவம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் ஆதித்ய வர்மா படம் ரிலீஸ் என தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
”
அப்பாடா! ஒரு வழியாக எல்லா பிரச்னைகளையும் கடந்து துருவ்வின் படம் வெளியாகவுள்ளது - அதை காண்பதற்கு தயாராகலாம்” என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, மற்றொரு அதிர்ச்சியை தயாரிப்பு தரப்பு அளித்துள்ளது. ஆம், ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆதித்ய வர்மா படம், இந்தியா முழுவதும் நவம்பர் 22ம் தேதிதான் ரிலீசாக உள்ளது.
அதே வேளை, ஏற்கெனவே சொன்ன தேதியான நவம்பர் 21ம் தேதி வெளிநாடுகளில் மட்டும் ஆதித்ய வர்மா படம் ரிலீசாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
துருவ் அறிமுகமாகும் முதல் படத்தின் ரிலீசிலேயே இவ்வளவு குழப்பமா? என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தப் படம் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற தலைப்பில் உருவானது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்குத் திருப்தி தராததால் 'வர்மா' கைவிடப்பட்டது. அதன் பிறகு, கிரிசாயாவை வைத்து 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் புதிதாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.