பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை கிரிமினல் செயல்களாகப் பார்க்காமல் அதற்கு அரசியல் சாயம் பூசுவது என்பது மிகக்கேவலமான செயலாகும். இதை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை’ என்கிறார் நடிகை அதிதி பாலன்.

‘அருவி’ என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குப் போனவர் நடிகை அதிதி பாலன். அடுத்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படம் அமையாததால் புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கும் அதிதி பொள்ளாச்சி சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மீடியாவைக் கடுமையாக விமர்சித்து 5 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,’’பொள்ளாச்சி சம்பவத்தில் வெறும் 5 பேர் மட்டுமே குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் பணபலம், அதிகாரபலம் படைத்த ஒருபெரிய கும்பலே இருக்க வாய்ப்பிருக்கிறது. காவல்துறை இந்தக் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கயும் எடுக்கப்போவதில்லை. நம் காவல்துறை நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

சூட்டோடு சூடாக இவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அனைத்துக் குற்றவாளிகளும் தோலுரிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். நம் சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களை எப்போதுமே ஆதரித்துப்பேசுவதில்லை என்பது இன்னொரு சோகம். ‘நீ இப்படி ஏமாந்திருக்கக்கூடாது என்று பழிபோட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனாலேயே பல பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதியை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.

அதேபோல் ஊடகங்கள் இந்த விஷயத்தில் பொறுப்பாக நடந்துகொள்வதில்லை. அவர்கள் எப்போதுமே பரபரப்புக்கு அலைகிறார்கள். பொள்ளாச்சி சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட ஒரு முன்னணி ஊடகம் ‘பொள்ளாச்சி சம்பவ வீடியோக்கள்’ என்று போஸ்டரில் தலைப்பிடுவதெல்லாம் எந்த வகை ஊடக தர்மம் என்று புரியவில்லை’ என்று சாடுகிறார் அதிதி பாலன்.