2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். முதற்கட்டமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கபீர் சிங்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 

தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியன வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. முதலில் நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருந்த படம், தற்போது நவம்பர் 22ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தை படத்தின் புரோமோஷனுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. 

தற்போது படத்தில் இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சி ஒன்று யு-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் துருவ் விக்ரமும், பனிதா சந்தும் நடித்துள்ள லிப் லாக் காட்சி இடம் பெற்றுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தைப் போன்று அச்சு அசலாக உள்ள இந்த காட்சி இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யு-டியூப்பில் வெளியிடப்பட்ட ஸ்னீக் பீக் காட்சியை இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.