தேடி வந்த இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்து விட்டு, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரே ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்கிற செய்திக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார் ‘அருவி’ நாயகி அதிதி பாலன்.

2017ன் இறுதியில் வெளிவந்த ‘அருவி’ படத்தின் பரபரப்பான வெற்றியின் மூலம் ஓவர்நைட்டில் புகழின் உச்சிக்குப் போனவர் நடிகை அதிதி பாலன். அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகளையும் வென்றார். ஆனால் இன்றுவரை என்ன காரணத்தாலோ அடுத்த படம் எதிலும் அதிதி கமிட் ஆகவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிவரும் ‘ஜாக் அண்ட் ஜில்’ படத்தில் அதிதி பாலன் கமிட் ஆகியிருப்பதாக செய்திகள் வந்தன. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு ஆகியோர் நடிக்கும் அப்படம் அக்டோபரில் துவங்கி படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், கடந்த வாரம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க அதிதி கமிட் ஆகியிருப்பதாக செய்திகள் வந்தன.

செய்தியை முதலில் கசிய விட்டுவிட்டு, அடுத்து தயாரிப்பாளர்கள் தன்னை அணுகுவார்களோ என்று காத்திருந்தாரோ என்னவோ சுமார் ஒரு வாரகாலம் மவுனம் காத்த அதிதி நேற்று அச்செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சந்தோஷ் சிவனின் மலையாளப்படத்தில் தான் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அப்படம் தொடர்பாக தன்னை ஒருவர் கூட தொடர்பு கொள்ளவில்லை என்றும் அதிதி தெரிவித்துள்ளார்.