’வர்மா’படத்தை ‘ஆதித்ய வர்மா’என்ற பெயரில் இரண்டாவது முறையாக எடுப்பதாலோ என்னவோ ஒரே படத்துக்கு கடைசி நாள் ஷூட்டிங் என்ற பெயரில் இரண்டு முறை பூசணிக்காய் உடைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பாலா அனுப்பிய ஒரு மெஸேஜுக்கு ‘ஆதித்ய வர்மா’படக்குழு எந்த அளவுக்கு அரண்டு போனது என்கிற ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.

அர்ஜுன் ரெட்டி வர்மாவாகி அது அடுத்து ஆதித்ய வர்மா ஆன கதை எழுதி எழுதி புளித்துப்போன கதை. தற்போது ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பயணத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பாலாவின் ஒரு எச்சரிக்கை மெஸேஜ் தொடர்பான ஒரு அதிர்ச்சி தகவல் லீக்கிகாகியிருக்கிறது. அதாவது ஆதித்ய வர்மாவின் இறுதிநாள் படப்பிடிப்பு இன்றோடு முடிந்தது என்று தயாரிப்பாளர் முகேஷ் ஜூலை 17ம் தேதி அன்றே ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

இவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பை முடிச்சிருக்க முடியாதே என்று ஏதோ பொறி தட்ட அடுத்த சில தினங்களில் தயாரிப்பாளருக்கும் நடிகர் விக்ரமுக்கும் ஒரு மெஸேஜ் அனுப்பினார் பாலா. அதில் ‘நான் ஷூட் பண்ணிய ‘வர்மா’வின் ஷாட்கள் எதையாவது பயன்படுத்தினால் சும்மா இருக்க மாட்டேன்’என்ற கடுமையான எச்சரிக்கை இருந்தது. இது என்னடா வம்பாப்போச்சி என்று அதிர்ந்த தயாரிப்பாளரும் விக்ரமும் வேறு வழியில்லாமல் பாலாவின் ஷாட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வெளி உலகத்துக்கு சொல்லாமல் மீண்டும் 15 நாட்களுக்கு மேல் ரீஷூட் பண்ணி மீண்டும் மறுபடியும் ‘இதோ கடைசி நாள் ஷூட்டிங்’என்று நேற்று மீண்டும் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த பயம் இருக்கட்டும்.