அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான விந்தியா அம்மாவின் சமாதியில் மாம்பழங்களை வைத்து மண்டியிட்டு வணங்கி சென்றார்.

ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக அறியப்பட்ட நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே நலத்திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பார். திருநெல்வேலி, சார்லி சாப்ளின், சங்கமம், கண்ணுக்கு கண்ணாக, சிம்ம ராசி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விந்தியா

நடிகை விந்தியா ஜெயலலிதாவின் தீவிர ரசிகை மட்டுமின்றி, என்றென்றும் விசுவாசியாக இருப்பவர். இது ஒரு பக்கம் இருக்க ஜெயலலிதா மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக, ஆண்டுதோறும் தொடர்ந்து தன் தோட்டத்து மாம்பழங்களை ஜெ - விற்கு அனுப்பி வைக்கும் பழக்கம் கொண்டவர்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் சந்திரகிரியில் தனக்கு சொந்தமாக உள்ள மாம்பழ தோட்டத்திலிருந்து மாம்பழங்களை பறித்து ஜெயலலிதாவிற்கு வருடந்தோறும் அனுப்பிவைப்பார். இந்த நிலையில் ஜெ இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதும், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு சென்று மாம்பழங்களை வைத்து மண்டியிட்டு வணங்கி சென்றுள்ளார் விந்தியா.

நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும், நட்சத்திர பேச்சாளரான விந்தியா பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக அம்மா சமாதிக்கு சென்று வணங்கி விட்டு, பின்னர் தான் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த நிலையில் தற்போது மாம்பழ சீசன் என்பதால் தோட்டத்தில் இருந்து மாம்பழத்தைக் கொண்டு வந்து அம்மா சமாதியில் வைத்து மீண்டும் வணங்கி சென்றுள்ளார் விந்தியா.

மாம்பழ கூடையோடு வந்த வித்தியாவை பார்த்த பொதுமக்கள் ஆவலாக கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது, மற்ற பல கூடைகளில் வைத்திருந்த மாம்பழத்தை எடுத்து பொதுமக்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தார். விந்தியாவின் இந்த செயலை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.