‘இப்போது இருக்கிற நடிகைகளில் என்னைக் கவர்ந்தவர்கள் என்று யாருமே இல்லை. இப்போதுள்ள நடிகைகள் அனைவருமே ஏனோ தானோ என்றுதான் பணி புரிகிறார்கள். வருகிறோம், நடிக்கிறோம், கிளம்புகிறோம் என்றுதான் இருக்கிறார்கள்’என்கிறார் முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி.

1980ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி சுமார் 25 ஆண்டுகாலம் தமிழ்,தெலுங்கு சினிமாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி சுமார் 13 வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் 14ம் தேதி முதல்  படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.2006ம் ஆண்டு வெளிவந்த ‘நாயுடம்மா’ படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும்.தற்போது கிட்டதட்ட 13ஆண்டுகள் கழித்து மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ள ‘சரிலேரு நீக்கெவெரு’ என்ற படத்தில் நடித்து வரும் அவர் தற்கால சினிமா குறித்து சில கருத்துக்களை மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர்,”மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது பதட்டமாக இருந்தேன். இந்த 13 ஆண்டுகளில் சினிமா ரொம்பவே மாறிவிட்டது. எனக்கு நிறைய வி‌ஷயங்கள் புதிதாக இருந்தன. கிட்டத்தட்ட பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை போலவே உணர்ந்தேன். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் நடித்து இருக்கிறேன். அவர் மகனுடன் தற்போது நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருமுறை அவருடன் நடித்துள்ளேன். அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.

நான் லேடி சூப்பர் என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்ததற்கு  அப்போது எனக்கு கிடைத்த நல்ல இயக்குனர்கள் தான் இதற்கு காரணம். ஆனால் இன்று அந்த அளவுக்கு நல்ல டைரக்டர்களும் இல்லை. கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் வருவது இல்லை. கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் தான் அதிகமாக வருகின்றன.கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் பெரும்பாலும் பேய் படங்களாக தான் இருக்கின்றன. ‘ராஜ மவுலி’ போன்ற மிக சில இயக்குனர்களே பெண்களுக்கான கதா பாத்திரங்களை சிறப்பாகவும் தனித்துவமாகவும் உருவாக்குகிறார்கள். டைரக்டர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரை உருவாக்க முடியும். அதற்கு கதாநாயகியை மையப்படுத்தும் கதைகள் வர வேண்டும்.

 இப்போதுள்ள நடிகைகளில் நல்ல நடிகை என்று யாரையுமே யோசிக்க முடியவில்லை. இப்போது சினிமாவும் அதில் பணி புரிவதும் நிறைய மாறிவிட்டது. இப்போது இருப்பவர்கள் ஏனோ தானோ என்றுதான் பணி புரிகிறார்கள். வருகிறோம், நடிக்கிறோம், கிளம்புகிறோம் என்றுதான் இருக்கிறார்கள்.நான் நடித்தபோது ஒரே ஆண்டில் 17, 18 படங்களில் நடித்தேன். தூக்கமே இல்லாமல் ஒரே நாளில் 6 ஷிப்ட்கள் வரை நடித்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இப்போது ஒரு ஆண்டுக்கு ஓரிரு படங்கள் தான் நடிக்கிறார்கள். ஆனாலும் கூட யாருமே கவனத்தை ஈர்ப்பது இல்லை’என்கிறார் விஜயசாந்தி.