’அஜீத்துக்கு நடிப்பெல்லாம் வரவே வராது. அவருக்குத் தெரிந்த ஒரே தொழில் பிரியாணி சமைப்பதுதான்’ என்று தல ரசிகர்களை நடிகர் பப்லு வெறுப்பேற்றியிருந்த நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’கொண்டவர் பற்றி நல்லவிதமாய் நான்கு கர்த்துக்கள் கூறி ரசிகர்களைக் குஷிப் படுத்தியிருக்கிறார் நடிகை வித்யா பாலன்.

வட இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ‘நேர்கொண்ட பார்வை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்ட வித்யா பாலன், “ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தனது காட்சிகள் முடிந்த உடன் வீட்டிற்குக் கிளம்பிவிடமாட்டார், படப்பிடிப்புத் தளத்திலேயே காத்திருந்து இணை நடிகர்களின் காட்சிகள் படப்பிடிப்பு முடிந்த உடன், அவர்களை வழி அனுப்பி விட்டுத்தான் கிளம்புவார்.

ஒரு நாள் அஜித் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனக்கு மட்டும் 3 காட்சிகள் எடுக்க வேண்டி பாக்கியிருந்தது. ஆனால் தனது வேலை முடிந்துவிட்டது என்று அஜித் வீட்டிற்குக் கிளம்பவில்லை. நான் நடிக்க வேண்டிய காட்சிகளும் முடிந்த பிறகு என்னை காரில் ஏற்றி அனுப்பிவிட்டுத் தான் அவர் வீட்டிற்கு கிளம்பினார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.