மற்ற மொழியில் சூப்பர் ஹிட் வெற்றிபெறும் படங்கள் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. 

இந்த படம் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

 தமிழில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடைய தந்தை, தியாகராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். தமிழை தொடர்ந்து  இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில்  நடிகர் நிதின் நடிக்க இந்த படத்தை மேர்லபகா காந்தி இயக்கவுள்ளார்.

தமிழில் தனி ஒருவன் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் ,இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவரையே நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள தயாரிப்பாளர் தியாகராஜன், இந்த படத்தில் தபு நடிக்க மறுக்கவில்லை என்றும் படக்குழு சார்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றும், விரைவில் இசையமைப்பாளர் பற்றிய முழு விவரமும் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.