தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா வாணியின் கணவரும்,  டிவி இயக்குனருமான சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது, திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சுரேகா வாணி, முன்னணி நடிகர்களான விஜய் நடித்த மெர்சல், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் உத்தம புத்திரன் , சிம்பு நடித்த 'வந்த ராஜாவாதான் வருவேன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர். மேலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து, சிறந்த  குணச்சித்திர நடிகை என பெயர் எடுத்தவர். 

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று சுரேஷ் தேஜாவிற்கு உடல் நிலை மோசமானதால், அவரை குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு சுரேஷ் தேஜா உயிரிழந்தார்.

பல தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்களை இயக்கியும், சின்னத்திரையில் வசன கர்த்தாவாகவும் அறியப்பட்ட இவர் நடிகை சுரேகா வாணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக சிறிய வயதில் இயக்குனர் சுரேஷ் தேஜா மரணமடைந்துள்ளது  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.