பிரபல நடிகையும், முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷின் மனைவியுமான சுமலதா பல நெருக்கடிகளையும் மீறி இன்று மாண்டியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின்போது  பிரபல நடிகர்கள் தர்ஷன் மற்றும் 'கேஜிஎப்' படப்புகழ் யஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளனர்.

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டார். இதனால்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுமலதா, மண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதேசமயம் பாஜக தன்வசம் இழுக்க முயற்சித்து வந்தது. இந்நிலையில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக சுமலதா நேற்று அறிவித்திருந்தார்.

மனு தாக்கல் செய்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ”தவிர்க்க முடியாத சூழலில் அரசியலுக்கு வந்துள்ளேன். அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தற்போது மனு தாக்கல் செய்துள்ளேன்.

 வெற்றி, தோல்வி முக்கியமல்ல. மண்டியா மக்களுக்கு பட்ட நன்றிக்கடனை தீர்க்க வேண்டும். கர்நாடக மாநில மக்களின் பிரச்சனைக்காக போட்டியிடுவேன். மண்டியா விவசாயிகள்  தங்கள் வாழ்வாதாரக்த்தை இழந்து வருகின்றனர்.  காவிரி விவகாரத்தில் அம்பரீஷ் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரின் மறைவுக்கு பின்பு அவரின் கனவுகளை நனவாக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் .ஆதரவு பொறுத்தவரையில் கன்னட நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.

எனக்காக நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.  அதை விட  மண்டியா தொகுதி மக்கள் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். எந்த மிரட்டலுக்கு அஞ்ச போவதில்லை. இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. “ என்றார் சுமலதா.