நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே, அர்ஜூன் உடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அர்ஜூன் மீது பரபரப்பு மீடூ புகார் கூறியிருந்தார். 2016 ஆண்டு நிபுணன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அர்ஜூன் அனுமதியில்லாமல் தன்னை திடீரென கட்டி அணைத்தாக புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை கேள்விப்பட்ட அர்ஜுன் இதுவரை 70 நடிகைகளுடன் நடித்துவிட்டேன். யாரும் இப்படி புகார் கூறியதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்த புகார் கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவின. 

அந்த பாலியல் குற்றச்சாட்டு தனது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டதாக புலம்பியுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். இந்தியின் தனுஸ்ரீ தத்தாவும், தமிழில் சின்மயியும் மீடூ புகார் கூறியதை அடுத்தே, எனக்கும் துணிச்சல் வந்தது. சுமார் ஒரு மாதம் நன்றாக யோசித்த பிறகே, இனி மற்றவர்களிடம் அவர் அப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் மீடூ புகாரை வெளியிட்டேன். 

கன்னட சினிமாவில் இந்த பிரச்னை எது சரி, எது தவறு என்ற மோசமான விளையாட்டாக மாறியது, நான் எதிர்பார்க்காத ஒன்று. எந்த இன்டஸ்ட்ரியும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. கடந்த ஒரு  வருடமாக நிறைய கற்றுக்கொண்டேன். அந்த நடிகர் மீது பாலியல் புகார் கூறினால் என்னை நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.