நயன்தாரா-ராதாரவி சர்ச்சையில் பத்திரிகையாளர்கள் நடவடிக்கை குறித்து தனது அதிருப்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகையும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல் மட்டக்குழு உறுப்பினர்களுல் ஒருவருமான ஸ்ரீப்ரியா.

‘கொலையுதிர்காலம்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய தரக்குறைவான பேச்சுகள் பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ராதாரவியின் அந்த வாய்த்துடுக்கான பேச்சுக்கு இந்தி நடிகர் நடிகைகள் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் தனது கருத்தைபதிவு செய்த நடிகை ஸ்ரீப்ரியா, பிரச்சினையை வேறு ஒரு கோணத்தில் அலசியுள்ளார்.  அதில் “பேச்சாளர்களுக்கு உள்ள கடமை, பார்வையாளர்களுக்கும் இருக்க வேண்டும். தவறான கருத்துக்கு கைதட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். இதனால், வாய்த்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்” என ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருப்பது முற்றிலும் பத்திரிகையாளர்களுக்கானது. ஏனெனில் அந்த சந்திப்பில் படக்குழுவினரும் பத்திரிகையாளர்களும் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை நயனின் காதலர் விக்னேஷ் சிவனும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.