தனது புற்று நோய் சிகிச்சைக்காக சேர்த்து வைத்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன் வந்த நடிகைக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த மனசு தெய்வத்துக்குச் சமம் என்று அவருக்கு கமெண்டுகள் குவிகின்றன.

தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை சரண்யா சசிக்கு மூளையில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பண உதவி தேவைப்படுவதாக அவரது சக நட்சத்திரங்கள் முகநூல் மூலம் சில மாதங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.மலையாளத்தில், மோகன்லால் நடித்த ’சோட்டா மும்பை’, ’தலப்பாவு’, ’பாம்பே மார்ச் 12’, ’மரியா காலிப்பினலு’ உட்பட பல படங்களில் நடித்தவர் சரண்யா சசி. தமிழில்,வ. கீராவின் இயக்கத்தில்  ’பச்சை என்கிற காத்து’ படத்தில் தேவதை என்ற பெயரில் நடித்தார். மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான டிவி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 6 வருடத்துக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, கடுமையாக அவதிப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதற்கிடையே, பினு சேவியர் என்பவரை திருமணம் செய்த சரண்யா சசி, தொடர்ந்து படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துவந்தார். இந்நிலை யில் அவருக்கு மூளையில் மீண்டும் கட்டி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் உடல் நிலை மோசமாகி யுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு அதிக செலவாகும் என்பதால், நடிகர், நடிகைகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரனும், நடிகை சீமா. ஜி நாயரும் இணைந்து முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், சரண்யா சசியின் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு கோரிகஇருந்தனர். ஏற்கனவே ஆறு முறை அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இப்போது ஏழாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சரண்யா மோசமான நிலையில் இருக்கிறார். இது அவருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டிருந்த  அவர்கள், உதவி செய்வதற்காக, நடிகை சரண்யா சசி அம்மாவின் வங்கி கணக்கையும் வீடியோவில் வெளியிட்டிருந்தனர். தற்போது அப்படி வசூலான தொகையில் ஒரு பகுதியை சரண்யா  வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.சரண்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தன்னால் முடிந்த உதவியாக சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாக அளித்துள்ளார்.இதனை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.