ஆந்திர சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே நகரி தொகுதியில் போட்டியிடும் தனது மனைவி நடிகை ரோஜா மீண்டும் வெற்றி பெறுவதோடு இம்முறை கண்டிப்பாக ஒய் எஸ்.ஆர் ஆட்சியில் அமைச்சராகவும் ஆவார் என்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது நண்பர்கள் வட்டாரங்களில் கொண்டாட்டமாகப் பகிர்ந்து வருகிறார்.

ஆர்.கே.செல்வமணியின் ‘செம்பருத்தி’யில் அறிமுகமாகி பத்தே ஆண்டுகளில் 150 படங்களில் நடித்தவர் என்ற சாதனையையும் புரிந்த ரோஜா ‘99ல் அரசியலில் காலடி எடுத்து தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் சந்திரபாபுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ். ஆர் காங்கிரசில் இணைந்த அவர் 2014 தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு அதிக வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.

நாளை மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேச கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் பேராவலாக உள்ளனர். 

இந்நிலையில் இன்று நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் விருப்பப்படி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம்வெற்றி பெற்று முதல்வர் ஆவார் என உறுதிபடக் கூறியவர் தாமும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவேன் என்றார்.

இந்நிலையில் சென்னையில் இயக்குநரும் அவரது கணவருமான ஆர்.கே.செல்வமணி தனது சக இயக்குநர்கள் வட்டாரத்தில் தனது மனைவி ரோஜா நகரி தொகுதியில் வெற்றிபெறுவது எப்படி 100 சதவிகிதம் உறுதியானதோ அந்த அளவுக்கு உறுதி அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதும்கூட என்று உற்சாகமாக இருக்கிறார்.