actress raveena name play the first in tamil cinema
தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் இது எழுதப்படாத விதி என்று கூட சொல்லலாம்...
இந்நிலையில் முதல் முறையாக ஒரு தமிழ் சினிமாவின் டைட்டிலில் நாயகி பெயர் முதலிடத்திலும் அதனை அடுத்து இரண்டாவதாக நாயகன் பெயரும் வரவுள்ளது. அந்த படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு"
பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா நாயகியாக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக விதார்த் நடிக்கிறார். சமீபத்தில் விதார்த் வெளியிட்ட ஒரு காணொளி காட்சி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியானது.
இதில் ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், 'ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம் என்றார்.
இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் 'மகளிர் தின' வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்" என்று உற்சாகமாக கூறியிருந்தார் விதார்த்.
அந்த காலத்தில் நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்ட சாவித்திரி முதல், லேடி சூப்பர் ஸ்டார் என்று தற்போது அழைக்கப்படும் நயன்தாரா வரை கிடைக்காத ஒரு பெருமை... டப்பிங் கலைஞராக இருந்து இன்று கதாநாயகியாக அறிமுகம் கொடுக்கும் ரவீனாவிற்கு கிடைத்துள்ளதை ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
