கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மந்தானா, கன்னட நடிகர் ரசீத் ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தார்.திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசீத் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்ட அவர், தாம் நடிக்க இருந்த கன்னட படத்தில் இருந்து விலகினார்.

இதனால், கன்னட படங்களில் ராஷ்மிகா மந்தனா இனி நடிக்க மாட்டார் என வதந்தி பரவிய நிலையில், அப்படி எல்லாம் இல்லை என்றும், கன்னட படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் கூறி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனிடையே, நடிகர் நாகர்ஜுனா, நானி ஆகியோருடன் இணைந்து தேவதாஸ் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில், தேவதாஸ் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்,நாகர்ஜுனா, நானி, ராஷ்மிகா மந்தனா உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்தபோது, நடிகை ராஷ்மிகா மந்தனா தம்மை காப்பாற்றிய சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அது குறித்து நாகர்ஜுனா பேசியதாவது, “தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, நானும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது, எங்கள் பின்னால் போதையில் அமர்ந்திருந்த 2 பேர், இருக்கையை காலால் உதைத்துக் கொண்டே இருந்தனர். மேலும், என்னைப் பற்றி அவர்கள் கிண்டல் அடித்துக் கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் போதை ஆசாமிகள், எனது இருக்கையை வேகமாக உதைத்தபோது நான் கீழே விழப்போனேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் என்னை தாங்கிப்பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, பின்னால் அமர்ந்திருந்த நபர்களிடம் அடிதடியில் இறங்கினார். இருவர் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார் ராஷ்மிகா மந்தனா. நானே போதை ஆசாமிகளை ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தபோது, ராஷ்மிகா மந்தனாவின் துணிச்சல் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.

எனவே அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” என நாகர்ஜுனா பேசினார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடிதடி செயலை நாகர்ஜுனா வெளியிட்டதை அடுத்து, தெலுங்கு திரையுலகில் அவர் பிரபலமாக பேசப்படும் நபராக மாறியுள்ளார்.