தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் 90களை சேர்ந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். விஜய், அஜீத், ரஜினி, கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் திரையுலகை வெற்றிகரமாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் தன்னுடைய மார்க்கெட் குறைய துவங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

அதன் பிறகு வெள்ளித்திரைப்பக்கம் அதிகம வரவில்லை என்றாலும் , சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக அவ்வப்போது வருவார். இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயான ரம்பா, சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றிருந்தார். 

ஆரம்பத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் காரணமாக தன் கணவனை பிரிய முடிவு செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு நீதிமன்றத்தின் அறிவுறைப்படி மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து குடும்பமாக வாழ ஆரம்பித்தார். அமைதியாக போய்க்கொண்டிருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் மேலும் சந்தோஷத்தை சேர்க்கும்படியாக மூன்றாவது முறையாக கருவுற்றிருந்தார் ரம்பா.

அப்போது கூட அவரிடம் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் சந்தோஷப்படுவீர்களா? பெண் குழந்தையாக இருந்தால் சந்தோஷப்படுவீர்களா? என பலர் கேட்டிருந்தனர். கடவுள் தந்தது எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷம் தான். பெண் குழந்தையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம், நானும் ஒரு பெண் தானே என்று மகிழ்வுடன் தெரிவித்திருந்தார்.

இப்போது அவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை ”கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை தந்து ஆசிர்வதித்திருக்கிறார்” என சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் ரம்பா. மூன்றாவது குழந்தைக்கு தாயாகி இருக்கும் ரம்பாவிற்கு அவரின் ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.