நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பிரபல நடிகையின் காதலர் குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபட்டதால் நடிகையின் நண்பரும் ஆர்.டி.ஓ.அதிகாரியுமான ஒருவருக்கு பீர் பாட்டிலால் மண்டையில் அடிவிழுந்தது.

தமிழில், ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி. கன்னடத்தில், ’நாயகா’, ’கெம்பே கவுடா’, ’வில்லன்’, ’ராகிணி ஐபி எஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனது ஆண் நண்பரும் ஆர்டிஓ அதி காரியுமான ரவிஷங்கருடன், பெங்களூர் ரெசிடன்சி சாலையில் உள்ள ரிட்ஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலுக்கு நேற்றுமுன் தினம் இரவு சென்றார். இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை நோக்கி, சிவபிரகாஷ் என்பவர் வந்தார். அவர் ராகிணியின் முன்னாள் காதலர் என்று தெரிகிறது.  குடிபோதையில் இருந்த அவர் ராகிணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத் தில் வார்த்தை முற்றியதால், ரவிஷங்கர் சண்டையை விலக்க முன் வந்தார். அப்போது சிவபிரகாஷூக்கும் அவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சிவபிரகாஷ், அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து, ரவிஷங்கரின் மண்டையில் அடித்தார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிய ரவி ஷங்கர், அசோக்நகர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் சிவப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.