பெங்களூருவையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் கன்னட திரை உலகில் பிரபல நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகைகள் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.  இவர்களில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே சஞ்சனா கல்ராணி ஜாமீன் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு மருத்துவ அறுவை சிகிச்சை இருப்பதாகவும்,  ஜாமீன் கிடைக்காவிட்டால் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சஞ்சனா கல்ராணியை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது. 

அதன்பின்னர் அரசு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நடிகை ராகினி திவேதி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகினி திவேதி ஜாமீன் மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.