ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏ.எல்.ரவி இயக்கி வரும் "தலைவி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் உருவம் வழக்கம் போலவே பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. ஆரம்பம் முதலே விமர்சனங்களில் சிக்கித் தவித்த கங்கனா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். பரத நாட்டியம் மற்றும் தமிழ் கற்றார், எப்படியாவது ஜெயலலிதாவாக காட்சியளிக்க வேண்டும் என அரும்பாடுபட்டார். 

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாக கூறிவிட்டு, அவரது தோழி சசிகலா இல்லை என்றால் எப்படி என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிரடி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி "தலைவி" படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க நம்ம முத்தழகு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி சின்னம்மா வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ள நிலையில், ஜெயலலிதாவின் ஆளுமையை கூர் தீட்டிய சசிகலா இல்லாமல் எப்படி தலைவி படம் முழுமையடையும் என்ற கருத்து உலவியது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் தொடக்கம் முதல் இறுதி வரை பயணம் செய்து, தற்போது ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார் சசிகலா. கங்கனாவுடன் படம் முழுவதும் தோன்ற உள்ள கதாபாத்திரம் என்று கூறப்படுவதால், கண்டிப்பாக பிரியாமணியின் வேடம் சசிகலா கேரக்டராக தான் இருக்கும் என்ற கூறப்படுகிறது.