ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’படப்பிடிப்பு முடிந்து குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியிருக்கும் நிலையில், கடைசி நாளான அக்டோபர் 3ம் தேதி அன்று ரஜினி உட்பட்ட யூனிட் மொத்தத்தையும் நடிகை நயன்தாரா டென்சனுக்கு உள்ளாக்கியது கோடம்பாக்கத்தில் வைரல் செய்தி ஆகிவருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ரஜினியின் ‘தர்பார்’படப்பிடிப்பு மூன்று முழு ஷெட்யூல்களாக மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்து முடிந்துள்ளது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று முன் தினம் அக்டோபர் 3ம் தேதி நடந்து முடிந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அதிகாலை 6 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட அதே நேரத்துக்கு வந்துசேர வேண்டிய நயன்தாரா காலை 9 மணி வரை தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியே வராமல் அடம்பிடித்தாராம். காரணம் அவருக்கு பேலன்ஸ் வைக்கப்பட்ட சில லகரங்கள் சம்பள பாக்கி. டப்பிங் பேசாத நடிகைகளுக்கு கடைசி நாள் ஷூட்டிங்கில் சம்பளபாக்கியை செட்டில் செய்துவிடவேண்டும் என்பது நடைமுறை.

நயனுக்கு செட்டில்மெண்ட் வராததால்தான் ஸ்பாட்டுக்கு வரவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்,  எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் நயன் பிடிவாதம் பிடிக்கவே ‘இன்னைக்கு லஞ்சுக்குள்ள புரடியூசர் தரலைன்னா, உன் பணத்துக்கு நான் பொறுப்பு’என்று முருகதாஸ் சொன்னபிறகே களத்திற்கு வந்திருக்கிறார் அவர். இதனால் அன்று சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் சும்மா உட்கார்ந்திருந்த ரஜினியும் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாராம்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் வங்கியிலிருந்து பணம் எடுப்பதில் இருந்த சிரமத்தை தயாரிப்பாளர் தரப்பு உணர்த்தி, முருகதாஸ் சொன்னபடி 3ம் தேதி மதிய அளவில் நயனுக்கு செட்டில் செய்திருக்கிறார்கள். நயன்தாரா கொஞ்சமும் நம்பிக்கை வைக்காமல் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் தெரியும்படி தங்கள் நிறுவனத்தை அவமானப்படுத்தியதால் லைகா நிறுவனத்தின் படங்களில் அவர் இருக்கமாட்டார் என்று நம்பலாம்.