தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என மூத்த நடிகர்களோடும், அஜித், விஜய், பரத் என இளம் தலைமுறையினரோடும் ஒரே சமயத்தில் ஜோடி போட்டு நடித்தவர்.  பல வெற்றி படங்களை கொடுத்த நமீதா, 2016ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான நமீதா, தற்போது உடல் எடையைக் குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார். 

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு அமைதியாக இருந்த நமீதா, அதன் பின்னர் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது நமீதாவின் அரசியல் பயணம் குறித்து வெளியாகியுள்ள பேட்டி ஒன்றில், இதுவரை விடை கிடைக்காமல் இருந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. அதில் அதிமுகவில் இருந்து ஏன் விலகினேன், பாஜகவில் இணைந்ததற்கான காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி பதிலளித்து பகீர் கிளப்பியுள்ளார் நமீதா. 

என்னுடைய அரசியல் ரோல் மாடல் ஜெயலலிதா தான், அதனால் தான் அதிமுகவில் இணைந்தேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு என்னை அதிமுகவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவர்களது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததாலும் தான் அதிமுகவை விட்டு விலகியதாக  நமீதா தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமே பாஜக தான், அதனால் தான் அக்கட்சியில் இணைந்தேன் என அதிரடியாக  பதிலளித்துள்ளார் நமீதா. தனக்கு மிகப்பெரிய அரசியல் கனவுகள் இருப்பதாகவும், தமிழகத்திற்காக நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ள நமீதா, அதை எல்லாம் நிறைவேற்ற சரியான இடம் பாஜக மட்டுமே என முடிவெடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தின் போது அவரது உடலை பார்க்க தனக்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள நமீதா, மக்களோடு மக்களாக நின்று தன் மனம் கவர்ந்த தலைவிக்கு அஞ்சலி செலுத்தியதையும் வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.