பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பிருந்தே பலவகையான சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்த நடிகையும் மாடலுமான மீரா மிதுன் இம்முறை தன்னுடைய பஞ்சாயத்தில் கமல்ஹாசனையும் கோர்த்துவிட்டிருக்கிறார். அக்னிச் சிறகுகள் படத்தில் தான் நடிப்பதாக இருந்த கேரக்டரில் தன் மகள் அக்‌ஷரா ஹாசனை சிபாரிசு செய்துவிட்டார் கமல் என்பது மீரா மிதுனின் குற்றச்சாட்டு.

அதற்கு பதிலளித்த அக்னிச் சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன், ” ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். துவக்கத்தில்  இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது….” என்று ட்வீட் செய்திருந்தார்.நவீனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த மீரா மிதுன், “உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா? ஏஞ்சலினா ஜுலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை வேறு என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான்ஞாபகப்படுத்தட்டுமா இயக்குநர் நவீன் சார்?.

தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆண்பிள்ளை போல் உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்” என்று ட்விட் பண்ணியிருந்தார்.

அதற்கு பதிலளித்த நவீன், “ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நான் இல்லை. என்னைவிட பெண்களான எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு எதோ பெரிய பிரச்சனை இருக்கிறது தயவு செய்து மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி பதில்” என்று பதிலளித்திருந்தார்.

விளம்பரங்களிலேயே குளிர்காய்பவரான மீரா மிதுன் அவ்வளவு லேசில் விடுவாரா? நவீனின் இந்த ட்வீட்டுக்கு மிகவும் சூடாக, "மைண்ட் யுவர் வேர்ட்ஸ். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று மிரட்டல் மற்றும் சவால் விடுத்துள்ளார்.