‘பொன்னியின் செல்வன்’படத்துக்காக இயக்குநர் மணிரத்னத்தால் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டு ரிஜக்ட் செய்யப்பட்ட நடிகைகள் பட்டியலில் தற்போது தளபதி 64’பட நடிகையின் பெயரும் அடிபடுவதால் அந்தப் பட்டியலில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் டிசம்பரில் தாய்லாந்தில் படப்பிடிப்பு த்டங்கவிருக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படம் குறித்து மணிரத்னமோ தயாரிப்பு நிறுவனமோ இதுவரை அதிகாரபூர்வமாக ஒரு செய்தி கூட வெளியிடவில்லை. ஆனாலும் சமீபத்தில் செய்திகளில் அதிகம் அடிபடுவது அப்படத்தின் பெயர்தான். தினமும் அப்பட நடிகர்கள் பட்டியலில் புதுப்புது பெயர்கள் அடிபடுவதும் சிலர் வெளியேறுவதும் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில், மணிரத்னத்தின் அலுவலகத்தில் வைத்து ஒரு குறிப்பிட்ட கேரக்டருக்காக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்ட நடிகை அமலா பால் அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறார் என்றொரு செய்தி பரபரப்பானது. அடுத்ததாக இயக்குநர் பிரியதர்ஷன் லிசி தம்பதியினரின் மகள் கல்யாணியை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்துப்பார்த்தார்களாம். அதன்பின் திருப்தியில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் மணிரத்னம். கல்யாணி இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிர்ச்சி செய்திகளின் உச்சமாக ரஜினியின் பேட்ட படத்திலும் இப்போது விஜய் 64 படத்தில் நாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் மாளவிகாமோகனனும் அவ்வாறு டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்தான் என்றும் ஒரு தகவல் பரவுகிறது. உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித்மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’படத்தில் நடித்து அவருடைய விஷேச பாராட்டுகளைப் பெற்றவர் மாளவிகா மோகனன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.