தமிழ் சினிமாவை பொறுத்தவரை, காமெடி நடிகைகளாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமான ஒன்று என்று கூறலாம். ஆச்சி மனோரமா, கோவை சரளா என ஒரு சிலர் மட்டுமே  ரசிகர்களின் நினைவுக்கு வருவார்கள். நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக, 'ஓகே ஓகே' படத்தில் நடித்து, முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான காமெடி பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜாங்கிரி மதுமிதா.

கடந்த 2012 ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், ஒரு வருடத்திற்கு 5 படங்களிலாவது நடித்து விடுவார். மேலும் இதை தாண்டி, சில காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி, தமிழில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார் மதுமிதா. இவருக்கு மக்கள் மத்தியிலும் பெருவாரியான ஆதரவு கிடைத்த போதிலும், ஹெலோ... டாஸ்கில் வந்த பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்று, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஓரிரு தினத்திற்கு முன், விஜய் டிவி தரப்பினர் நடிகை மதுமிதா மிரட்டல் விடுவதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போன் மூலம் விளக்கம் கொடுத்த மதுமிதா, தான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் பிக்பாஸ் தரப்பினரிடம் இருந்து பொய் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீறி, தான் எந்த ஒரு அவதூறு செயலிலும் ஈடுபட வில்லை என தன்பக்கம் உள்ள நியாத்தை எடுத்து கூறினார்.

செய்தியாளர்கள், ஏன் இப்போது இந்த பேட்டி கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, சினிமாத்துறையில் நான் 8 வருடங்கள் இருந்தும் ஒரு முறை கூட இப்படி பட்ட பிரச்சனைகள் எனக்கு வந்தது இல்லை. இப்போது தான் இப்படி நடந்துள்ளது. எனவே எல்லா நேரங்களிலும் அமைதியாக இருந்துவிட கூடாது. உண்மை என்ன என்பதை பேச முன்வர வேண்டும் என கண்கலங்கியவாரே கூறினார்.