‘என்னைப் பொதுவெளியில் குற்றவாளி போல்,பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கும் விஜய் டிவி. நிர்வாகம் பொதுமக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்கவேண்டும். இல்லையேல் அந்த நிகழ்ச்சி குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டி வரும் என அந்நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா கூறினார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். 

தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில் ,’பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர். கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண்  தமிழ்ப்பெண்னுன்னு சொல்ற.  எங்கே தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன்’. நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’என்று பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார் மதுமிதா.

இந்நிலையில் விஜய் டிவியிலிருந்து தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகைக்காக ஆடியோ மூலம் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டி.வி. நிர்வாகம் மதுமிதா மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தது. இந்த திடீர் புகாரால் அதிர்ச்சி அடைந்த மதுமிதா சற்றுமுன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,’விஜய் டி.வி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை எனக்கு பேரதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள அந்த நிர்வாகம் அனுப்பும் டாக்டர்களையே பயன்படுத்துகிற அளவுக்கு நான் இன்னும் கூட அவர்களின் விதிக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறேன்.அப்படி இருக்க என்னைத் தொடர்பு கொள்வதை விட்டுவிட்டு போலீஸுக்குச் சென்றதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இப்போதும் கூட உங்களைச் சந்திப்பதற்கு விஜய் டி.வி நிர்வாகத்தையே தொடர்புகொண்டேன். ஆனால் அனைத்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளன. பத்திரிகையாளர்கள் கேட்கிற அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் கடமையிலிருந்து அவர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள் என்பது விளங்கவில்லை’என்கிறார் மதுமிதா.