நடிகை லட்சுமி மேனன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்த இந்த படத்தில், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ’கும்கி’,  ’பாண்டியநாடு’,  ’ஜிகர்தண்டா’,  ’மஞ்சப்பை’ போன்ற பல படங்கள் லட்சுமி மேனனுக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

பட வாய்ப்புகள், குறைய துவங்கியதும், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய, ’ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து இவர் நடித்த பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ’ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் லட்சுமிமேனன் 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கௌதம் கார்த்திக் கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, இருவரும் கைகோர்க்க உள்ளனர். இந்த படத்தில் தான் லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், ஆகிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.