பிக்பாஸ் சீஸன் 3 நடந்து முடிந்து ஒரு வாரத்துக்கும் மேல் ஆகியும் அது தொடர்பான பஞ்சாயத்துகள் பல திசைகளில் கிளைவிட்டுப் படர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய் டி.வி நேற்று வெளியிட்ட புரோமோ வீடியோ ஒன்றைக் கிழிகிழியென்று கிழித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

தனது பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் புரமோட் செய்வதற்காக விஜய் டி.வி தொடர்ந்து புரமோசன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அப்படி நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கவின், தர்ஷன், முகேன்,சாண்டி ஆகியோர் ‘வி ஆர் த பாய்ஸு வி ஆர் த பாய்ஸு’என்று ரிப்பீட்டாகப் பாடிவரும் பெண்களை வெறுப்பேற்றும் காட்சிகள் இருந்தன. அதனைக் கண்டு கடுப்பான கஸ்தூரி,...விஜய் டிவியின் இந்த ரசனை மிக மட்டமாக இருக்கிறது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? என்று மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதே போல் தூத்துக்குடி கல்லூரி விழா ஒன்றில்,...தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தனியாக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி கிடையாது. அது பொழுது போக்குக்காக நடத்தப்படக்கூடிய நிகழ்ச்சி. அதுவே பொறுப்புள்ள பொழுது போக்காக இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கக் கூடியதாக உள்ளது. இந்த வருடத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகத் தான் இருந்தது என்று பேசியிருக்கிறார்.