ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏ.எல்.ரவி இயக்கி வரும் தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் உருவம் வழக்கம் போலவே பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. ஆரம்பம் முதலே விமர்சனங்களில் சிக்கித் தவித்த கங்கனா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். பரத நாட்டியம் மற்றும் தமிழ் கற்றார், எப்படியாவது ஜெயலலிதாவாக காட்சியளிக்க வேண்டும் என அரும்பாடுபட்டார். 

தன் மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கங்கனா ரனாவத், தீவிர படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த சமயத்தில் இன்று ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக, அமமுக என அரசியல் கட்சி பிரமுகர்கள் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வரும் கங்கனா ரனாவத் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிலர் படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை துடைப்பதற்கான முயற்சி என்றும், சிலர் மார்க்கெட்டிங் டெக்னிக் என்றும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் கங்கனா ரனாவத்தின் இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.