ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி. ஐதராபாத்தில் வங்கியில் வேலை பார்த்து வரும் இவர், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில் சமீபத்தில் முடிந்த சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு நடிகை ஜோதி ரெட்டி ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். கடப்பாவில் இருந்து ரயில் மூலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிகூடாவிற்கு செல்லும் வழியில் அசந்து தூங்கி உள்ளார். தூக்க கலக்கத்தில் கச்சிகூடா ஸ்டேஷனுக்கு பதில் ஷாட்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார் ஜோதி.

இதையடுத்து தான் தவறான ஸ்டேஷனில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி, மீண்டும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். ரயில் கிளம்பிய நிலையில், ஓடி சென்று அவர் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜோதி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூக்கத்தால் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 26 வயதே ஆகும் ஜோதி ரெட்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.