’என் உறவினர்கள் யாரும் ஏமாற்றி என் சொத்துக்களைப் பிடுங்கவில்லை. படத் தயாரிப்பில் ஈடுபட்டதால் மட்டுமே கஷ்ட ஜீவனத்துக்கு ஆளானேன்’ என்று நடிகை ஜெயசுதா பேட்டியளித்துள்ளார்.

‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் தமிழில் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு ’சொல்லத்தான் நினைக்கிறேன்’,’இரு நிலவுகள்’,’அபூர்வ ராகங்கள்’,’நினைத்தாலே இனிக்கும்’ உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடப்படங்களிலும் நடித்து நீண்ட புகழ்பெற்ற நடிகை ஜெயசுதா. மிக சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார்.

சில தினங்களாக இணையங்களில் இவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், உறவினர்கள் இவரது சொத்தைப் பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாகவும் செய்திகள் கை,கால்கள் முளைத்துக் கிளம்பின. தற்போது அச்செய்திகளை மறுத்து தெலுங்கு இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில்,...எனக்கு 2 அண்ணன்கள், ஒரு தங்கை. நான் நடிக்க தொடங்கிய பிறகு என் குடும்பத்தினரின் தேவைகளை நான் பார்த்துக்கொண்டேன். பிறகு கல்யாணமாகி, எல்லோருக்கும் தனித்தனி குடும்பங்கள் உண்டானது. 1980, 1990களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக நிறைய சம்பாதித்தேன். அப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எல்லாம் அதிகமாக இல்லை.

அப்போது புத்திசாலித்தனமா யோசித்து இருந்தால், சம்பாதித்த பணத்தை எதிர்காலத் தேவைக்கு உதவும் வகையில் சேமித்து இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்குச் சொத்துகளை வாங்கினோம். நல்ல நிலையில்தான் இருந்தோம்.எனக்கும், என் கணவருக்கும் சினிமா தொழில்தான் தெரியும். அதனால், கணவர் சினிமா தயாரிப்பாளர் ஆனார். என் கணவர் மூன்று தெலுங்கு படங்கள் எடுத்தார். அவை ஹிட்டாகி, எங்களுக்கு லாபமும் கிடைத்தது. அடுத்து இந்தியில் ஒரு படம் எடுத்து, அது சுமாராக தான் ஓடியது. அந்த படத்தால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.

பிறகு கடன் வாங்கி, மீண்டும் தெலுங்குப் படங்களைத் தயாரித்தார். அடுத்து எடுத்த 3 தெலுங்கு படங்களும் பெரிய தோல்விகளைத் தழுவின. இதனால் எங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் உண்டானது. கடன், வட்டிச்சுமை, மன உளைச்சல் என்று எங்கள் இருவருக்கும் தினந்தோறும் மனக்கஷ்டங்கள்தான்.அதன் பிறகு பயத்தில் என் கணவர் மீண்டும் படம் எடுக்க தயங்கினார். அதையே நினைத்துக்கொண்டே இருந்ததால்தான் என் கணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. கடன் கேட்டு கொடுத்தவர்கள் அடிக்கடி போன் பண்ணுவது, வீட்டு வாசலில் நிற்பது, நாலு பேர் நாலு விதமா பேசுவது எல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமா பிடிக்காது. அதனால் கடன் சுமை தீர்ந்தா போதும் என்று முடிவு எடுத்து, எங்கள் சொத்துகளை விற்றோம்.

அப்போது பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவும் அளவுக்கு என் குடும்பத்தார் யாரும் வசதியாக இல்லை. அதனால் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். நடிப்புக்கும், என் வயதுக்கும் ஏற்ற பொறுப்பு உள்ள கதாபாத்திரங்களில் இப்போது வரை நடிக்கிறேன். நடித்து சம்பாதித்த பணத்தில், கடன் சுமைகளை எல்லாம் முழுமையாக சரிப்படுத்தினேன்.பசங்களை படிக்க வைத்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகிட்டேன். இப்போது சில சொத்துகள் மட்டும் இருக்கு. ஆனால் எந்தக் கடன் சுமையும் இல்லை என்கிற நிறைவும், சந்தோ‌ஷமும் அதிகமாகவே இருக்கு.

எங்களுக்கு கஷ்டமான நிலை ஏற்பட்ட போதும், இப்போதும் என் உடன்பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. சொத்துகளை இழந்ததெல்லாம், சினிமா தயாரிப்பு பணிகளால்தான்.இந்நிலையில் என் கணவர் இறந்துட்டார். பின்னர் என் பசங்களுக்கு அடுத்து, என் குடும்பத்தினர்தான் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. அவங்க யாரும் என் சொத்துக்களை அபகரிக்கவில்லை. உண்மைநிலை இதுதான். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்’என்று கேட்டுக்கொண்டுள்ளார் ஜெயசுதா.