நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது பாஜகவா  அல்லது காங்கிரஸ் கட்சியா? என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணிகள் தற்போது இல்லை. பாஜகவில் இருந்து பெரும்பாலான கூட்டணி கட்சிகள் விலகி சென்று விட்டன. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி இல்லாமல் திணறி வருகிறது.

மாநிலங்களில் செல்வாக்குமிக்க கட்சிகளாக திகழும் கட்சிகள் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைமையை ஏற்க மறுத்து உள்ளனர். அவர்கள் தனியாக போட்டியிட்டு அதிக எம்.பி.க்களை பெற்று மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று மும்முரமாக உள்ளனர்.

இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்போது திரையுலக நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் அரசியல் கட்சிகளில் இணைவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

ஏற்கனவே மோகான்லால் உள்பட ஒருசில பிரபல நடிகர்களும், நடிகைகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகை இஷா கோபிகர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்  நிதின்கட்கரி கலந்து கொண்ட நிலையில் அவரது முன்னிலையில் நடிகை இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டார்.

நடிகை இஷா கோபிகர் விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', விஜய் நடித்த 'நெஞ்சினிலே', அகத்தியன் இயக்கிய 'காதல் கவிதை, 'பிரசாந்த் நடித்த 'ஜோடி, போன்ற தமிழ்ப்படங்களிலும், ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாஜகவில் இயைந்ததையடுத்து எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்லில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.