நடிகை இலியானாவைத் தீவிரமாகக் காதலித்து ஒரு கட்டத்தில் தாடி வைத்து ஒதுங்கிக் கொண்ட வாலிப வயோதிக அன்பர்களுல் நீங்களும் ஒருவரா? இதோ உங்களுக்காக் ஒரு நற்செய்தி. தனது காதலருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை அவசரமாக நீக்கியுள்ளார் நடிகை இலியானா. இச்சம்பவத்தை ஒட்டி இனி இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

தமிழில், ’கேடி’, விஜய்யின் ’நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. மேலும் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார். தனது காதல் பற்றி வெளிப்படையாக இலியானா கூறவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாயின.பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை இருவரும் உறுதி செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் ஒன்றாகச் சுற்றும் செய்திகளால் இலியானாவின் ரசிகர்கள் வாழ்க்கையே வெறுத்து அலைந்தது உண்மை.

இந்நிலையில் நடிகை இலியானாவுக்கும் ஆண்ட்ருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக ஒரு நற்செய்தி  நடமாடத்துவங்கியுள்ளது. இதனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திவிட்டனர்.கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஆண்ட்ரு தனது 31 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது, அவருக்கு காதல் மெசேஜ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார், இலியானா. இப்போது அதை நீக்கியுள்ள இலியானா, ஆண்ட்ருவின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இனி இலியானாவின் ரசிகர்கள் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தலைவியைப் பின் தொடரலாம்.