நேற்று நடந்த இந்திய இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்குக் காரணம் அவர்கள் அணிந்த காவி உடைதான் என்ற பிரச்சாரங்கள் வலைதளங்களில் அநியாயத்துக்கு வைரலாகிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி பட நாயகி ஒருவரும் ‘எங்களுக்கு ப்ளூ ஜெர்ஸிதான் வேண்டும்’ என்று கூக்குரல் இட்டிருக்கிறார்.

பிர்மிங்காமில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி காவி நிற ஜெர்ஸி அணிந்ததற்கு மேட்ச் துவங்கும் முன்பிருந்தே பல திசைகளிலிருந்தும் கண்டனக்குரல்களும் ஏளனக்குரல்களும் எழுந்தன. அனைவரின் ஆசைப்படி அந்த மேட்சில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. மக்களுக்கு சொல்லவும் வேண்டுமா...இதுவரை ஒரு மேட்ச் கூடத் தோக்காத இந்தியா இப்பத் தோத்துருக்குன்னா அதுக்கு காவி எஃபெக்ட்தான் காரணம் என்று ஆளாளுக்கு வறுத்தெடுக்க ஆரம்பித்தவிட்டனர்.

இந்த சாதாரண மக்களின் குரல்களுக்கு தற்போது பிரபலங்களும் ஆதரவு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பட்டியலில் முதலில் இணைந்திருப்பவர் முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி. அவரைத் தொடர்ந்து தற்போது இந்திப்பட உலகின் முன்னணி நடிகையும் ரஜினியின் ‘காலா’பட காதலியுமான ஹுமா குரேஷியும் காவி யூனிஃபார்முக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில்,...இது மூட நம்பிக்கையெல்லாம் இல்லை...எங்களுக்கு மறுபடியும் ப்ளூ ஜெர்ஸிதான் வேணும்...சொல்லிட்டோம் அவ்வளவுதான்’என்று மிரட்டலாகப்பதிவிட்டிருக்கிறார்.