தனது டிரைவரை தொழில் பார்ட்னராக வைத்துக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த முன்னணி கேரள நடிகை அஸ்வதி பாபுவை நேற்று கொச்சி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி பாபு. ’ஸ்வர்ண புருஷன்’, ‘வெளிப்பாடிண்ட புஸ்தகம்’ உள்பட பல படங்களில் நடித்திருக்கும் அஸ்வதி பாபு கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா மற்றும் டி.வி சீரியல்களில் நடித்துவருகிறார். இவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று நேற்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த போதை மருந்து சினிமா பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் நடிகர் நடிகைகளுக்கு உற்சாக நேரத்தை அதிகரிக்கப் பயன்படும் அயிட்டம் என்று சொல்லப்படுகிறது.

நேற்று மாலை நடக்கவிருந்த ஒரு பார்ட்டிக்காக கஸ்டமர் ஒருவர் இவர்களிடம் போதை மருந்து வாங்க வந்தபோது காத்திருந்த போலிஸார் அஸ்வதியையும் டிரைவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

விசாரணையில் பெங்களூரில் இருந்து போதைப் பொருளை அவர்கள் ரெகுலராகக் கடத்தி வந்து இங்கு வைத்து  விற்று வந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போதை பொருள் வழக்கில் முன்னணி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.