நடிகை பானுபிரியா 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து ஒரு வருடமாக, சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தி வருவதாக சிறுமியின் தாயார் சென்னை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் பானுபிரியவிடம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது புகாருக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பானுபிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், சிறுமி தன்னுடைய வீட்டில் ஒரு வருடமாக வேலை செய்து கொண்டிருப்பது உண்மை தான். மேலும் சிறுமி, தினமும் வீட்டை சுத்தம் செய்யும்போது, சிறிது சிறிதாக தங்கம் மற்றும்  எலக்ட்ரானிக் பொருட்களை திருடி வைத்துக்கொண்டு அவ்வப்போது பார்க்க வரும் தாயாரிடம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தெரிய வரவே சிறுமியை தாங்கள், விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். பின் சிறுமியின் தாய்க்கு ஃபோன் செய்து "மகள் திருடினால் நீதான் கண்டிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு திருடிய பொருட்களை வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறாய் என்று,  கேட்டதாக கூறினார்.

அதற்கு சிறுமியின் தாயார் தன்னிடம் மகள் கொடுத்த பொருட்களை கொடுத்து விடுவதாக கூறி, மொபைல் போன் மற்றும் 2 கைக்கடிகாரங்கள் மட்டுமே தன்னிடம் எடுத்து வந்து சிறுமி கொடுத்ததாகவும் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து திருடிய 30 சவரன் தங்க நகையை கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இதனை தாங்கள் கேட்டதால், சிறுமியின் தாயார் தற்போது போலீசில் பொய் புகார் கொடுத்து விட்டார் என பானுப்ரியா தெரிவித்துள்ளார்.  மேலும் தன்னுடைய சகோதரர் வேலை செய்யும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சிறுமியின் தாயார் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என்றும், இதற்காக தாங்கள் நிச்சயம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.