தனது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை சித்திரவதை செய்ததோடு, அவர் மீது பொய்க்குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்பிய காரணத்துக்காக நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபியும் எந்த நிமிடமும் சென்னை பாண்டி பஜார் போலீஸாரால் கைதாகக்கூடும் என்று தெரிகிறது.

ஆந்திர மாநில சிறுமி ஒருவர் தி.நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்த போது சித்ரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.இதற்கிடையே சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஐ.பேட், கேமரா, விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமியையும், அவரது தாய் பிரபாவதியையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்திருந்தனர். அடுத்து  சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே  இந்த விவகாரத்தில் புதிய  திருப்பமாக 14 வயது சிறுமி  சந்தியாவை கொடுமைப்படுத்துவதாக, அச்சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், பானு பிரியா மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்தனர். புகார் ஆந்திராவில் கொடுக்கப்பட்டது. பானு பிரியா சென்னையில் வசிக்கிறார். அதனால் இந்த வழக்கை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆந்திர போலீசார் இந்த  வழக்கின் கோப்பினை தற்போது சென்னை போலீசாருக்கு  அனுப்பியுள்ளனர். அதன்படி சென்னை பாண்டிபஜார் போலீசார்  பானு பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  குற்றங்கள் செய்ததாகச் சிறார் நீதிக் குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ்  323 - காயம் ஏற்படுத்துதல், 506 - மிரட்டுதல், அவமதித்தல், தொந்தரவு தருதல் மற்றும் 341 - சிறை வைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைக்காக நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணனும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.