கொரோனா சினிமாவை நம்பி வாழ்ந்த பல சின்னத்திரை மற்றும் துணை நடிகர், நடிகைகள் வாழ்வில் பல சோகங்களை உருவாக்கியுள்ளது. சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த நடன கலைஞர்கள், லைட் மேன், சப்போர்டிங் ஆர்ட்டிஸ் ஆகியோர் அதை கைவிட்டு பழக்கடை, கருவாடு வியாபாரம், ஆட்டோ ஓட்டுவது என மாற்று தொழிலை தேடி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது மத்திய, மாநில அரசுகள் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்தாலும், குறைவான ஆட்கள் மட்டுமே ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். 

வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து. தொடர்ந்து சினிமா, டிவியில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது கொரோனா காலத்தில் கூட சக கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை வழங்கி வந்தார். தீவிர சேவையில் ஈடுபட்ட இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்காக கிட்டதட்ட 7 மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். நல்ல படியாக தற்போது வீடு திரும்பியுள்ள சிந்துவை, அவருடன் அங்காடித்தெரு படத்தில் நடித்த பிளாக் பாண்டி சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி சிந்துவின் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், சிந்துவுக்கு மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டதாகவும், இருப்பினும் கீமோ உள்ளிட்ட சிகிச்சைக்கு பணம் இல்லாததால் திரையுலகினர், ரசிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்யும் படியும் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த வீடியோவில் பேசியுள்ள சிந்து, நான் நல்லா இருந்த காலத்தில் பலருக்கு உதவி புரிந்துள்ளேன். ஆனால் நான் கேன்சரில் படுத்ததும் யாருக்கும் எனக்கு உதவ முன்வரவில்லை. இப்ப பணம் மற்றும் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். சக நடிகைக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். தனது அறுவை சிகிச்சைக்கு நடிகர்கள் சாய் தீனா, கார்த்தி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷன், நடிகை சோனியா போஸ் வெங்கட் உள்ளிட்டோர் உதவி புரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.