தனது கால்ஷீட்டை தொடர்ந்து வீணடித்து வருவதால் கமல்,ஷங்கர் கூட்டணியின் ‘ந்தியன் 2’படத்தை விட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியேற உள்ளதாகவும் அவரை தயாரிப்பு நிறுவனம் பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்த முயல்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் உருவாகிறது. ஆரம்பத்தில் சில பல சிக்கல்களை எதிர்கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்க, சித்தார்த், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, நெடுமுடி வேணு, விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

 தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இன்னும் இரண்டு தினங்களில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேதி நெருக்கடி காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் இயக்குநர் ஷங்கர் மொத்தமாக பல மாத கால்ஷீட் கேட்டு வருவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதே பிரச்சினையால் தான் ஆர்.ஜே.பாலாஜியும் ‘இந்தியன் 2’ வில் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது, அதே தேதி பிரச்சினையால் தான் ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் இருந்து விலகியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘மெய்’ படம் இன்று வெளியாகிறது. மேலும், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ’கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’[தெலுங்கு], ’க.பெ.ரணசிங்கம்’, ’வானம் கொட்டட்டும்’, ’கருப்பர் நகரம்’ ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஒரு படத்துக்காக மற்ற படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி கெட்ட பெயர் வாங்கவேண்டாம் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.