’குடும்ப நல நீதிமன்றம் கலந்துகொள்ளச் சொன்ன கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள விருப்பமில்லை. நான் எனது விவாகரத்து வழக்கை ஹைகோர்ட் மூலம் பார்த்துக்கொள்கிறேன்’என்று தெனாவட்டாக பதில் அளித்த நடிகை அதிதி மேனனை நீதிபதி எச்சரித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வளர்ந்து வரும் நடிகர் அபி சரவணனும் நடிகை அதிதி மேனனும் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முக்கிய செய்திகளில் இடம்பிடித்தனர். அதிதி தன் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வேறொரு காதலனுடன் தப்பி ஓடிவிட்டதாக புகார் செய்ய, அதிதியோ அபி சரவணனின் கேரக்டர் பிடிக்காமல்தான் ஓடினேன். அவருக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்புள்ளது என்று புகார் கூறியிருந்தார்.

இந்தப் பஞ்சாயத்துகளின் உச்சமாக தனக்கும் அதிதி மேனனுக்கும் திருமணம் நடந்ததற்கு ஆதாரமான புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கிய அபி சரவணன் அதன் தொடர்ச்சியாக தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி மதுரை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தநிலையில், அபி சரவணன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிவந்த அதிதி மேனனை, இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில்  நடிகர் அபி சரவணனும் அதிதி மேனனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதியை சந்தித்த அதிதி மேனன் தரப்பு, இந்த வழக்கில் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்றும், தனது விவாகரத்தை ஐகோர்ட் மூலம் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.இந்தப் பதிலால் கோபமடைந்த நீதிபதி,  `இது குடும்பநல நீதிமன்றம். இங்கே நாங்க சொன்னபடி கேக்கணும்.  கண்டிப்பாக கவுன்சலிங்கில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார். நீதிபதியின் கோபத்துக்கு ஆளானதால் அதிதி தரப்பு ஆடிப்போயுள்ளது.