திரையுலக மார்க்கெட்டிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகவும் டல்லான நிலையில் இருக்கும் நடிகர் சிம்புவின் வாழ்க்கையில்  விரைவில் பேரொளி வீசப்போவதாக அவரது நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் கவுதம் மேனன் படத்தில் வரும் காட்சி போலவே இச்செய்தி இருப்பதால் இதை நம்புவதா வேண்டாமா என்றும் தெரியவில்லை.

சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை.இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் அவரால் அட்வான்ஸ் வாங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர் ஒன்றுகூடி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மேலும் ஒரு கெட்ட செய்தியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்த மாநாடு படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டது அவருக்கு பெருத்த அடியாக மாறியது. அதன் தொடர்ச்சியாக அவர் அறிவித்த ‘மகா மாநாடு’படச் செய்தியை அவரது ரசிகர்களே கூட காமெடியாகத்தான் எடுத்துக்கொண்டார்கள். ஏனெனில் சிம்பு அறிவித்து டிராப் ஆன படங்களின் பட்டியை அவ்வளவு நீளமானது.

இப்படி தொடர்ந்து டிராஜடியாகப் போய்க்கொண்டிருந்த சிம்புவின் சீன்களில் ஒரு சின்ன ட்விஸ்ட். அண்மையில் சிம்பு குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் சிம்புவின் அம்மா அப்பா, தங்கை மற்றும் அவருடைய கணவர், தம்பி மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடன் சிம்பு இருக்கிறார்.இப்படம் வெளியானபோது அதைப் பார்த்த சிம்புவின் முன்னாள் காதலி மனமுருகிப் போனாராம். எல்லோரும் ஜோடியாக இருக்கிறார்கள், சிம்பு மட்டும் தனியாக இருக்கிறாரே என்று கலங்கிய அவர், சிம்புவைத் தொடர்பு கொண்டு ஆறுதலாகப் பேசினாராம்.அந்தப் பேச்சு தொடர்வதாகவும் அது திருமணம் வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.