’எட்டு வருடங்களுக்கு முன்பு வெறுமனே நான்கு நாட்கள் மட்டும் நடித்த படத்தில் கூட நான் ஹீரோவாக நடித்ததாக விளம்பரம் செய்து என்னையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள்’என்று கொந்தளிப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு.

ரஜினியின் ‘தர்பார்’தொடங்கி இன்று யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். இதைப் பயன்படுத்தி அவர் ஒரு சில காட்சிகளில் காமெடியனாக நடித்த படங்களைக் கூட அவர் ஹீரோவாக நடித்த படம் என்று சில தயாரிப்பாளர்கள் புரமோட் செய்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் திடீரென்று முளைத்திருக்கும் படம் ‘பட்லர் பாபு’.அச்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த யோகி பாபு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,...தர்மபிரபு, கூர்கா ஆகிய இரண்டு படங்களில்தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன்.’பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை.

மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். எனக்கு ஹீரோ ஆகும் ஆசை இல்லவே இல்லை. நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி... என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.