Will Smith : ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளருக்கு அறைவிட்ட சம்பவம்... மன்னிப்பு கோரினார் நடிகர் வில் ஸ்மித்
Will Smith : வன்முறை என்பது விஷம் போன்றது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் தனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது என வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
94-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்ற நடிகர் வில் ஸ்மித், நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் தோற்றத்தை பற்றி கிண்டலடித்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் வில் ஸ்மித். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “வன்முறை என்பது விஷம் போன்றது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவை என்பது எனது வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஜடாவின் உடல்நிலை குறித்த கிண்டலடித்ததால் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டேன்.
நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் எல்லை மீறி நடந்துகொண்டேன், நான் செய்தது தவறு. நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.
அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இந்நிகழ்ச்சியை பார்த்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வில் ஸ்மித்.
இதையும் படியுங்கள்... Oscars 2022 :மனைவியை கிண்டலடித்ததால் ஆத்திரம்! தொகுப்பாளரின் கன்னத்தில் பொளேர் விட்ட வில் ஸ்மித் - viral video