இந்த நிலையில் அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் பெற்றவர். அத்துடன், சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி மூட நம்பிக்கையை ஒழிக்கும் சமூக சிந்தனையாளராகவும், மரங்களை நட்டு சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் பன்முக தன்மைகளுடன் வலம் வந்தவர்.

இப்படி மக்கள் மனதில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த நடிகர் விவேக் நேற்று மாராடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர், துணை குடியரசுத் தலைவர், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஊடகங்களிலும் விவேக்கிற்கு பதிலாக விவேக் ஓபராய் பெயர் இடம் பெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இதில், “நான் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தவறான செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நானும், எனது குடும்பமும் மும்பையில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், தமிழ் திரையுலக நடிகர் விவேக் மறைவு செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. எனது ஆழ்ந்த இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
