சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ள போதிலும்,  கடந்த ஓரிரு தினத்திற்கு முன் போலீசாரின் தடையை மீறி சில மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டாபிராம் முதல்,  அண்ணாநகர் சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்த பேருந்து, பாரதி சாலை அருகே வந்த போது எதிர் திசையில் கையில் மாலையுடன் வந்த மாணவர்கள் அரசுப் பேருந்துக்கு மாலை அணிவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்தின் மீது ஏறியும் மாணவர்கள் சிலர் கத்தி கோஷமிட்டனர்.  மாணவர்களின் இந்த செயலால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  மேலும் பஸ்ஸின் மேற்கூரையில் மீது ஏறி பஸ்ஸில் கூச்சலிட்டுக் கொண்டே சென்றனர்.  அப்போது திடீரென டிரைவர் பிரேக் போடவே,  பேருந்தின் மேற்கூரையிலிருந்து மாணவர்கள் கொத்துக்கொத்தாக கீழே விழுந்தனர்.  

இதில் சிறு சிறு காயங்கள் மட்டுமே மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என பேருந்தின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களை கேலி செய்யும் விதமாக,  நடிகர் விவேக் அவர் நடிகர் தனுஷுடன் நடித்த படிக்காதவன் படத்தில் இருந்து ஒரு மீம்ஸ் வெளியிட்டு மாணவர்களை கேலி செய்துள்ளார்.